சரிந்து விழும் வானத்தின் கீழாக நின்றபடி கத்திக் கொண்டிருக்க வனம் நெகிழ்ந்து சாகிறது நதி ஊடாடி கடலோடு ஆவியாகி வெற்றாய் நிரம்பிக்கிடக்கும் பாலைபூமியில் ஏதுமில்லை நீயுமில்லாது நானுமில்லாது வெற்றாய் நசிகிறது வெளி

எத்தனை தூரம்தான் வீசியெறிய நொறுங்காது பறவையென பறக்கும் இக்கண்ணாடியை என் பிம்பத்தைத் தின்று பருந்தென கருக்கொள்கிறது உயரமேறி கூர்ந்து நோக்கி வீழ்கல்லைப் போல என்னுள் நொறுங்கி சிதறி குத்துகிறது பிம்பம் கருநிழலாய் வழிகிறது

வாயை சற்று திறந்தபடி வலது காலை இடது காலின் மேல் வைத்து கண்களை உள்ளிழுத்து காட்சிகளினுள் வழியும் இடைவெளிகளை மறந்து அமர்ந்த அணர்த்த பொழுதில் கடந்து போகிறது ஈ